புலமைப்பரிசில், GCE (A/L) பரீட்சை புதிய திகதிகள் கல்வி அமைச்சர் அறிவிப்பு


இவ்வருடத்தின் அக்டோபர் மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த கல்விப் பொது தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நவம்பர் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இவ் இரண்டு பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் இருவேறு கருத்துக்கள் நிலவியதால் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு பின்னர் மாற்றுத் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்:

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை அக்டோபர் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதைய சுகாதார நிலைமையை கருத்திற் கொண்டு மாணவர்களுக்கு அநீதி இடம்பெறுவதை தவிர்க்கும் வகையில் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானித்தோம்.

கடந்த வருடத்தில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 6 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் தோற்றினர். கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக அதன் பெறுபேறுகளை வெளியிட தாமதமாகியது. நுண்கலைப்பாடங்களுக்கான பரீட்சைகளை குறித்த காலத்தில் நடத்த முடியாமலும் போனது. அதற்கு நாட்டில் நிலவிய சூழ்நிலையை காரணமாகும்.

இந்த பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடி நடவடிக்கைகள் தொடர்பில் அதிபர்கள் கல்வியமைச்சு தெளிவுபடுத்தியுள்ளனர். அதற்கிணங்க ஜூலை 28ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு பயிற்சிகளுக்காக அவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட உள்ளனர். பாடசாலை அதிபரினால் இந்த பரீட்சை பயிற்சிகளுக்காக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தெரிவுசெய்யப்பட்டு உரிய அட்டவணைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி இதற்காக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உரிய சுகாதார நடைமுறைகளுக்கிணங்க சமூக இடைவெளியை பின்பற்றி அதனை நடத்தவும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற திகதி எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றன.

எனினும் அதனை ஓகஸ்ட் 7ஆம் திகதி வரை நீடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது ஆசிரியர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று காலை வரை மேல் மாகாணத்தில் 97 விதமான ஆசிரியர்களுக்கும் தென் மாகாணத்தில் 83 விதமான ஆசிரியர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனைய மாகாணங்களிலும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இன்று அனைத்து பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாட உள்ளேன். போராட்டங்கள் காரணமாக மாணவர்களின் கல்வி நிலைமைகள் வீழ்ச்சி அடைவதுடன் அப்பாவி மாணவர்களை பாதிக்கப்படுகின்றனர்.

நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன்.ஒன்லைன் கற்கைகளை பாடசாலை திறக்கப்படும் வரை முறையாக நடத்துவதற்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments