விழுமியக் கல்வி தொடர்பான வரிவான வினாக்கள் மற்றும் விடைகள் | Value Education Questions and Answers

 


1. இரண்டு அல்லது மூன்று வரைவிலக்கணங்கன் ஊடாக விழுமியக் கல்வி எண்ணக்கருவினை சுருக்கமாக விளக்குக.

விழுமியக் கல்வி என்றால் என்ன தொடர்பாக பல்வேறுபட்ட வரைவிலக்கணங்களை தத்துவவியலாளர்கள், உளவியியலாளர்கள், கல்வியிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் சிலவற்றை நோக்கி பொதுப்டையான வரைவிலக்கணத்துடன் விழுமியக் கல்வி எண்ணக்கருவினை விளக்கலாம்.

  • தத்துவவியலாளர் விழுமியக் கல்வியினை - “சிறந்ததொரு வாழ்க்கை முறை எனவும் புவியில் வாழ்வதற்கு ஏற்றதொரு நெறிமுறை” எனக் கூறுகின்றனர்.
  • உளவியல் அறிஞர்கள் விழுமியக் கல்வியினை - குறிப்பிட்ட செய்திகள், பொருள்கள் அல்லது பாரம்பரியத்தைக் குறித்த உடன்பாடான மற்றும் உடன்பாடற்ற கருத்து வெளிப்பாடு, மனப்பான்மை அல்லது மனவெழுச்சி நிலை என்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் மனிதருடைய ஆளுமை, மனவெழுச்சி, அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அவருடைய நடத்தையானது அமையும் என்று கூறுகின்றனர். மனிதருடைய வாழக்கைச் சூழல் மற்றும் அவர்களின் பாரம்பரியம் அவர்களின் நடத்தையால் மாறுபடும் என்று கருதுகின்றனர்.
  • கல்வியியல் அறிஞர்கள் - “விழுமியங்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் மனிதச் செயல்கள் அல்லது நடத்தைகள்” என்கின்றனர். சமூகத்தால் அங்கீகரிப்பினைப் பெறுகின்ற பொருள், செயல், கருத்து, நடத்தை அல்லது வாழ்க்கை முறை மதிப்புடையது எனக் கூறுகின்றனர்.

மேற்குறிப்பிடப்பட்ட பொதுப்டையான தத்துவவியலாளர்கள், உளவியியலாளர்கள், கல்வியிலாளர்களின் விளக்கங்களுக்கு மேலதிகமாக அறிஞர்களின் குறிப்பான சில வரைவிலக்கணங்களை நோக்குவோம்.

டேவிட் (David) (1964), “மனிதர்கள் பிறர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று வகுத்துள்ள நெறிமுறைகள் விழுமியம்” என்று கூறுகிறார். மேலும் அந்நடத்தைகள் பிறருக்குப் பயனளிக்கக் கூடியனவாகவும் இருக்க வேண்டும்” என்கின்றார்.

நேய்பால் (Naipaul) (1979), “தகுந்த முறையில் விழுமியங்களை தேர்வு செய்து நற்செயல்களைப் புரிவதன் மூலம் நாம் வாழும் வாழ்க்கைக்கொரு சிறந்த வடிவமும், நல்வழியும் கிடைக்கின்றது” என்கின்றார்.

கானே (Kane) (1962), “விழுமியங்கள் எனப்படுபவை குறிப்பிட்ட சமூகத்தினர் அல்லது பெரும்பான்மையான சமூகமானது பின்பற்றுகின்ற, நம்பிக்கை மற்றும் நெறிமுறைகள்” எனக் கூறுகிறார்.

மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களினூடாக விழுமியக் கல்வி எண்ணக்கருவினை பின்வருமாறு விளக்கலாம். கற்போரிடத்தில் சரியான மனப்பான்மைகள் விழுமங்கள், உணர்வுகள், நடத்தைக் கோலங்கள் ஆகியவற்றை உருவாக்கிடும் அனைத்துக் கல்விச் செயல்களும், விழுமியக் கல்வி என்று குறிக்கப்படுகிறது. விழுமியக் கல்வி என்பது கற்பவரை மேம்பட்ட மனிதனாக்கி அவரது

ஆளுமையில் உரிய மாற்றங்களை ஏற்படுத்துவதேயாகும். வாழும் வாழ்க்கை முறையே மக்களை மாக்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. எப்படியும் வாழலாம் என்பதை விட, இப்படித் தான் வாழவேண்டும் என்று மக்களை நினைக்க வைப்பது அவர்கள் கொண்டுள்ள சீரிய விழுமியங்களே (Values). பிறந்த குழந்தை சமூக நெறிகளைக் கற்றுத் தெளிந்து அதன்படி வாழ்வதற்குத் தன்னைத் தயார் செய்து கொள்கிறது. ஆனால் அக்குழந்தை வாழும் சமுதாயத்தின் சமூக நெறிமுறைகள் ஏற்புடையது தானா என்ற வினா எழுகிறது. எந்த சமுதாயத்திற்கும் ஏற்றம் தரும் சீரிய சமூக நெறிமுறைகள் யாவை என்பதை சுட்டிக்காட்டுவதே விழுமியங்கள் ஆகும். சண்டை சச்சரவுகள் அற்ற அமைதிப் பூங்காவாக இவ்வுலகம் விளங்க வேண்டும் என்றால் மன நிறைவுடனும் மனித நேயத்துடனும் மக்கள் வாழ வேண்டுமானால் ஒவ்வொருவரும் விழுமியங்கள் துணைகொண்டு வாழவேண்டும்.

விழுமியக் கல்வி என்பது கற்பவரை மேம்பட்ட மனிதனாக்கி, அவரது ஆளுமையில் உரிய மாற்றங்களை ஏற்படுத்துவதே ஆகும். எனவே ஆளுமையின் மூன்று நிலைகளான அறிதல், உணர்தல், செயல்படுதல் ஆகிய அனைத்தும் மதிப்புணர்வுக் கல்வியில் உள்ளடங்கும். விழுமியக் கல்வி மூலம் மாணவன் நல்லது, கெட்டது, சரியானது தவறானது என்பனவற்றை பிரித்தறியும் ஆற்றலையும் அவற்றோடு தொடர்புடைய மன எழுச்சிகளையும் பெற்று விளங்குவதோடு, விழுமங்களை சிந்தனையில் உள்வாங்கி செயல்கள் மூலம் வெளிப்படுத்தும் “தன்மயமாக்குதலை” (யுளளiஅடையவந ஐவெநசயெடடல) பெற்றுத் திகழ வழிசமைப்பதே விழுமியக் கல்வி எண்ணக்கருவாகும்.

2. பாடசாலை மாணவர்களிடம் விழுமியக் கல்விக்கான தேவை பற்றி சுருக்கமாக எடுத்துரைக்குக.

பாடசாலையில் மாணவர்கள் வெறுமனே கல்வியை மாத்திரம் கற்பதனால் சமூகத்திற்கு பயனழிக்காது மாறாக விழுமியத்துடன் கூடிய கல்வியினூடாக மாத்திரம் மிகச் சிறந்த நற்பிரசைகளை உருவாக்கமுடியும். உதாரணத்திற்கு உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக்கு இணையாக உணவிற்கு உப்பு எந்தளவு முக்கியமோ அவ்வாறு தான் கல்விக்கு விழுமியம் அவசியமாகின்றது. மேலும் விழுமியக் கல்விக்கான தேவை பற்றிய சுருக்கமாக கூறலாம்.

  • மாணவர்களைப் பொறுப்புணர்வுடன் கூடிய குடிமக்களாக உருவாக்க முடியும்.
  • அவர்களிடையே நன்னடத்தையை உருவாக்க முடியும்.
  • அவர்களால் நன்னெறிகளையும், எதனை எவ்வாறு தக்க தருணங்களில் பின்பற்ற வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள முடியும். எந்த நிலையிலும் நெறி பிறழாமல் நடக்க வேண்டும் என்ற மன உறுதியைப் பெற இயலும்.
  • விழுமிய உணர்வுகள் தொடர்பாக மனத்தில் எழும் போராட்டங்களின் அடிப்படைக் காரணத்தைப் பகுத்தாராய்ந்து, தெளிவுகண்டு வாழ முடியும்.
  • ஒருங்கிணைந்த ஆளுமைப் பண்பு உடையவராக முடியும்.
  • தம்முடைய மனத்தில் இருக்கும் விழுமிய உணர்வுகளை மட்டுமின்றி பிறர் மனத்திலுள்ள கருத்துகளையும் புரிந்து கொண்டு விழுமிய உணர்வு தொடர்பான மனப்போராட்டங்களைத் தவிர்க்க முடியும்.
  • தன்னைப் பற்றிய கருத்தினை உருவாக்க முடியும்.
  • மாணவர்களுக்கு தம்மைப் பற்றியும், தம் தேசத்தைப் பற்றியும், பிற நாட்டினரைப் பற்றிய நேரிடையான தோழமை மனப்பான்மையை உருவாக்கி அதன் மூலமாகத் தேச ஒற்றுமை, உலக ஒற்றுமைக்கு வழி செய்தல்.
  • பிறருடைய சமயம் மற்றும் நம்பிக்கைக்கு மதிப்பளித்தல்.
  • சட்டதிட்டங்களை மதித்து நடத்தல்.
  • சுற்றுச்சுழல் பாதுகாப்பதில் தனிநபரின் கடமை.
  • குடும்ப நெறி பேணுவதில் பொறுப்புணர்வு.
  • அடிப்படை பண்பு நலங்களாகிய வாய்மை, ஒற்றுமை, சகோதரத்துவம், அன்பு, அமைதி, தைரியம், சமத்துவம், சமயத்துவம், நீதி, பிற உயிரைத் துன்புறுத்தாமை, செய்யும் தொழிலைத் தெய்வதெனக் கருத்தில் கொள்ளும் குணம், கருணை, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், அறிவியல் மனப்பான்மை மற்றும் உணர்வினை மாணவர்களிடையே ஏற்படுத்தும்.
  • அவர்களை சாதி, மத, மொழி, சமய வேறுபாடு அற்றவர்களாக உருவாக்கல்.
  • பரந்த மனப்பான்மையுடையவர்களாக்குதல்.
  • ஒவ்வொரு நிலையிலும் மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று உணர்ந்து செயல்படும் திறன்.
  • வயதிற்கேற்ப உள்ள மதிப்புணர்வுப் போராட்டங்களை தாமே எதிர்கொண்டு தெளிவுகாணும் திறனை உண்டாக்குதல்.
  • முழுவதும் கற்றுத் தேர்ந்தவர்களாக்குதல். கல்வியின் உண்மையான பரப்பெல்லை அவசியத்தினை புரிந்து கொள்ளச் செய்தல்.

போன்றவற்றை வளரச் செய்து அதன்படி வாழ வகை செய்தற்கு பாடசாலையில் விழுமியக் கல்வி தேவையாக காணப்ப்படுகிறது.

3. விழுமியங்களின் வகைகளை உதாரணங்களுடன் பட்டியலிடுக.

நாட்டில் வாழும் சமூகத்தினரின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் தேவைகளுக்கேற்ப விழுமியங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றைக் கல்வியாளர்களும், தத்துவவியலாளர்களும் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தி உள்ளனர். அவற்றுள் சில பின்வருமாறு.

  • சில அறிஞர்கள் : இறுதி அல்லது முனைய (terminal ) , கருவிசார் (instrumental) விழுமியங்களை 2 வகைப்படுத்துகின்றளர்.
  • வால்டர் ஜீ எவர்ரெட் ((Wallter G Everett) 8 வகைகளாக விழுமியங்களை வகைப்படுத்துகின்றார்.

  1. பொருளாதார விழுமியங்கள் (Economical Values)
  2. உடல் சார்ந்த விழுமியங்கள் (Physical Values)
  3. பொழுதுபோக்கு விழுமியங்கள் (Recreational Values)
  4. தொடர்புடைய வழுமியங்கள் (Associative Values)
  5. நடத்தை சார்ந்த விழுமியங்கள் (Character related Values)
  6. அழகுணர்வு அல்லது கலையுணர்வு விழுமியங்கள் (Aesthetic Values)
  7. நுண்ணறிவு விழுமியங்கள் (Intellectual Values), சமயம் சார்ந்த விழுமியங்கள் (Religious Values)
  • ஸ்பெரன்ஜர் (Spranger) என்பவர் விழுமியங்களை ஆறாக வகைப்படுத்தி உள்ளார்.

  1. கருத்தியல் விழுமியங்கள் (Theoretical Values)
  2. அரசியல் விழுமியங்கள் (Political Values)
  3. சமூக விழுமியங்கள் (Social Values)
  4. பொருளாதார விழுமியங்கள் (Economical Values)
  5. அழகுணர்வு விழுமியங்கள் (Aesthetic Values)
  6. சமயஞ்சார்ந்த விழுமியங்கள் (Religious Values)

மேற்படி வகைப்பாடுகளை பொதுமைப்படுத்தி விழுமியங்களின் வகைகளை 7 ஆக வகைப்படுத்தி உதாரணங்களுடன் நோக்குவோம்

1. சுய விழுமியங்கள் (Personal Values)

ஒருவர் தான் வாழ்வில் பின்பற்றும் விழுமியங்கள் இவை என்று எவற்றை பெருமையுடன் கூறுகிறானோ, அவையே அவரது ‘சுய விழுமியங்கள்’ ஆகும். இவ்வகையில் விடாமுயற்சி, தேடிச் செல்லுதல் (Pரசளரவைள) ஆதிக்கம் செலுத்துதல், எதையும் தனதாக்கிக் கொள்ள முயலுதல், எதிலும் இன்பம் காண முயலுதல் போன்றவை அடங்கும். இவை பிற மனிதர்களை பாதிக்காதவரை உயர்மதிப்புகளே பிறரை பாதிக்கத் தொடங்கும் போது கீழ்நிலை விழுமியங்களாகக் கருதப்படும்.

2. சமய விழுமியங்கள் (Religious Values)

இறை நம்பிக்கை, இறைவனை அடையும் வழிமுறைகள், அத்தகைய வழிமுறைகளில் இருந்து விலகி நடப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை, சமய விழுமியங்கள் இயற்கை வாதிகள் இயற்கையை வணங்குவர். கருத்தியலாளர்கள் யாவற்றையும் கடந்து நிற்கும் கடவுளையும் இறைத் தூதர்களையும் வணங்குவர். பயனளவுக் கொள்கையாளர்கள் கருத்துப்படி சமய விழுமியங்கள் சமூக இடைவினைகளால் தோன்றுகின்றன. எனவே சமூக மாறுதல்களுக்கு ஏற்ப மாற்றமடைபவை. ஆக சமய விழுமியங்கள் மனிதருக்கு மனிதர் வேறுபடும்.

3. சமூக விழுமியங்கள் (Social Values)

எந்த ஒரு சமூகமும் முறையாக நன்கு இயங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் தேவை. இத்தகைய இயற்கை நியதிகளைப் பின்பற்றி வாழ்வதே சாலச் சிறந்தது என்பது இயற்கை வாதிகளின் கொள்கை. கருத்தியாளர்களோ தனி மனித சுதந்திரத்திற்கும் விடுதலை வேட்கைக்கும் மதிப்பளிக்கின்றனர். பயனளவுக் கொள்கையாளர்கள் சமூக விழுமியங்கள், சமூத்தில் ஏற்படும் நிகழ்வுகளால், பெருவாரியான மக்களின் மனப்போக்கால் உருவாகின்றன என்கின்றனர். உதாரணமாக மதுபானம் அருந்துதல் மேலை நாடுகளில் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்திய மக்கள் அதை இழி செயலாகக் கருதுகின்றனர்.

4. பொருளாதார விழுமியங்கள் (Economic Values)

எப்பொருட்கள் அரிதாகக் கிடைக்கின்றனவோ அதிக மன நிறைவை அளிக்கின்றனவோ அவையே உயர் மதிப்பு உடையவை. எப்பொருட்கள் மிக அதிக அளவில் கிடைக்கின்றனவோ அவற்றால் விளையும் பயன்களும் குறைவோ அவை தாழ்நிலை மதிப்புடையவை.

5. அரசியல் விழுமியங்கள் (Political Values)

ஆரம்ப காலத்தில் மனசாட்சி மதிக்கப்பட்டு வந்தது. ஆனால் மக்களின் கல்வியறிவு சுதந்திர வேட்கை, அதிகாரப் பங்கீடு வேண்டும் என்ற மனப்போக்கு ஆகியவற்றால் ஜனநாயகம், சோஷியலிஸம், சமயச்சார்பின்மை (Secularism) போன்றவை செல்வாக்குப் பெறத் தொடங்கின.

6. அறிவுசார் விழுமியங்கள் (Religious Values)

இவை உண்மையின் பல வடிவங்களைப் புரிந்து கொள்வது தொடர்பானவை. வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பது (Unity in Diversity) மோசமானவற்றிலும் நன்மையைத் தேடுவது. இருளிலும் வெளிச்சத்தைக் காண முயல்வது போன்ற அறிவார்ந்த செயல்களே உயர் விழுமியம் உடையவை. இவற்றிற்கு நேர்மாறான செயல்கள் தாழ்நிலை மதிப்புடையவை.

7. ஒழுக்க நெறி விழுமியங்கள் (Ethical Values)

ஆன்மீக விழுமியங்ககளும் (Spiritual Values) ஒழுக்க நெறி விழுமியங்ககளும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை. சுயக்கட்டுப்பாடு, தன்னை உணர்ந்தறிதல் (Self-realization), அகிம்சை (Non-violoence), உண்மையைப் பேசுதல் (Truthfulness), பரிவு (Sympathy) எளிமை (Celibacy), சுய கௌரவம் (Self dignity), தன்னலமற்ற தொண்டு (Selfless Service) போன்றவை ஆன்மீக உயர் விழுமியங்களாகும். இவற்றிற்கு எதிரானவை தாழ்நிலை விழுமியங்களாகும்.

MNSM. Yoosuf  B.Sc. in MIT (SEUSL), PGDE (MERIT) NIE, M.Ed. (R) OUSL

BT/BC/KAWATHAMUNAI AL AMEEN MAHA VID. 

உசாத்துணைகள்

1. தனவதி, ச. (2017). மதிப்புணர்வு மற்றும் அமைதிக் கல்வி. சமியுக்தா பதிப்பகம்.

2. பாத்திமாஇ மு. இ ராம மூர்த்திஇ பி. (2010). அமைதி மற்றும் மதிப்புணர்வுக் கல்வி. ஸ்ரீ ஜீ.வி. பதிப்பகம்.

3. சாய்குமாரிஇ க. (2008). மதிப்புணர்வுக் கல்வி. சாந்தா பப்ளி~ர்ஸ்.

4. Chand, J. (2007). Value Education. Anshah Publishing House.

Post a Comment

0 Comments